Last Updated:
8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க மாட்டீர்களா என தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த டிரம்ப்புக்கு ஒரு வழியாக நோபல் பரிசு கிடைத்துவிட்டது.
2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, பல்வேறு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் போது, நான் தான் அதனை சரி செய்தேன் என கூறிக்கொள்ளும் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உட்பட 8 போர்களை நிறுத்தி விட்டேன் என்று சொல்லி வருகிறார்.
இவ்வாறு உலக அமைதியை பாதுகாத்து வரும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை என்றும் அவர் பலமுறை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது உண்டு. கடந்த ஆண்டு நோபல் பரிசு தனக்கு தான் என நம்பிக்கையுடன் டிரம்ப் இருந்த போது, அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சடோவுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா அரசின் அடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதாக கூறி மரியாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெனிசுலா மீது பல குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் வைத்து வந்தார். மேலும் அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்த முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு படகுகள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிர்ம்ப்-ஐ வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக டிரம்ப் தனித்துவமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிய மரியா கொரினா, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்கினார். நோபல் பரிசாக வழங்கப்பட்ட தங்க நாணயத்தை frame போட்டு அதில் வெனிசுலா மக்களின் சார்பாக இதனை அமெரிக்க அதிபர் டிரமப்புக்கு வழங்குவதாக மரியா கொரினா குறிப்பிட்டுள்ளார். மரியாவின் செயலுக்கு டிரம்ப்பும் நன்றி தெரிவித்துள்ள நிலையில், சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை பகிர்ந்தது.
இந்நிலையில், மெடல் அதன் உரிமையாளரை மாற்றிக்கொண்டாலும், நோபல் பரிசை பெற்றவர் என்ற பட்டம் இடம் மாறாது என நோபல் பரிசு வழங்கும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நோபல் பரிசை பகிர்ந்துக்கொள்ளவோ, பட்டத்தை மற்றவர்களுக்கு வழங்கவோ விதிகளில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோ சிறைப்பிடிக்கப்பட்ட பின்பு, டிரம்ப்பின் ஆதரவு பெற்ற மரியா கொரினா அந்நாட்டின் அதிபராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்டிரிக்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் மரியா கொரினாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அவரை வெனிசுலா அதிபராக அங்கீகரிக்க டிரம்ப் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது தனது நோபல் பரிசையே டிரமப்ப்க்கு மரியா கொரினா தூக்கி கொடுத்த நிலையில் வெனிசுலாவில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


