63 வயதான நிக்கோலஸ் மதுரோ, கராகஸில் உள்ள ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர், இதுவே மதுரோவின் அரசியல் ஆர்வத்திற்கு விதையிட்டது. மதுரோ 1990-களின் தொடக்கத்தில் கராகஸ் மெட்ரோ நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சுமார் 7 ஆண்டுகள் அவர் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில் அவர் தனது சக ஊழியர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்தார்.
பேருந்து ஓட்டிய அதே காலகட்டத்தில், அவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். கராகஸ் மெட்ரோ நிறுவனத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு தொழிற்சங்கத்தை அவரே முன்னின்று உருவாக்கினார். அப்போது தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் துணிச்சலாகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தார்.
அவரது தந்தையும் ஒரு தொழிற்சங்கத் தலைவராக இருந்ததால், போராடும் குணம் அவருக்கு ரத்தத்திலேயே இருந்தது. 1992-ல் ஹியூகோ சாவேஸ் சிறையில் இருந்தபோது, மதுரோ ஒரு சாதாரண பேருந்து ஓட்டுநராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து சாவேஸிற்கு ஆதரவு திரட்டினார். சாவேஸின் விடுதலையை வலியுறுத்தி பேருந்து ஓட்டுநர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தியது மற்றும் போராட்டங்களை ஒருங்கிணைத்தது மதுரோதான். இதுவே சாவேஸின் நம்பிக்கையைப் பெற அவருக்கு உதவியது.
சாவேஸ் அதிபரான பிறகு, மதுரோவின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருந்தது. 1999-ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் இருந்தார். 2006 முதல் 2013 வரை வெனிசுலாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது, அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைப்பதில் பெரும் பங்காற்றினார். 2006-ல் நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் இவர் தடுத்து நிறுத்தப்பட்டபோது ஏற்பட்ட ராஜதந்திர மோதல் உலகளவில் பேசப்பட்டது.
வெளியுறவு அமைச்சராக மதுரோ, இஸ்ரேல் மற்றும் தாய்லாந்து நாடுகள் உடனான உறவுகளை துண்டித்தார். ரஷ்யா கியூபா மற்றும் சீனா உடனான உறவை மேம்படுத்தினார். 2012-ல் சாவேஸ்-சின் உடல்நிலை மோசமடைந்தபோது, மதுரோவைத் தனது வாரிசாக அறிவித்து துணை அதிபராக நியமித்தார். 2013-ஆம் ஆண்டில், சாவேஸ் மறைந்த பிறகு நடந்த தேர்தலில் வெறும் 1.5% வாக்கு வித்தியாசத்தில் மதுரோ வெற்றி பெற்றார். மதுரோ அதிபரான பிறகு, அவர் அடிக்கடி மேடைகளில் தனது பழைய ‘பேருந்து ஓட்டுநர்’ அடையாளத்தைப் பெருமையுடன் குறிப்பிடுவார். “நானும் உங்களில் ஒருவன், ஒரு தொழிலாளி” என்ற பிம்பத்தை உருவாக்க அவர் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
மதுரோவிற்கு முறையான பல்கலைக்கழகக் கல்வி இல்லை என்பதை அவரது எதிர்ப்பாளர்கள் அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. பேருந்து ஓட்டுநரால் எப்படி ஒரு நாட்டை வழிநடத்த முடியும்? என்ற விமர்சனத்தை அவர் இன்று வரை எதிர்கொண்டு வருகிறார். மதுரோவின் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் தடைகளால் வெனிசுலா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. பணவீக்கம் பல லட்சம் சதவீதம் உயர்ந்தது.
இது மட்டுமல்லாமல், கொலம்பிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொக்கைனை அமெரிக்காவிற்குள் கடத்தி, அமெரிக்காவிற்கு எதிராக அதை ஒரு ‘ஆயுதமாக’ பயன்படுத்துவதாக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மதுரோவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறுகின்றன. 2024 தேர்தலுக்குப் பிறகு, எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்காக வீடுகளில் புகுந்து கைது செய்யும் ஆபரேஷன் துன் துன் (Operation Tun Tun) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவறான நிர்வாகம் காரணமாக மக்கள் உணவின்றித் தவிப்பதும், சுமார் 70 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியதும் மதுரோவின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது. நிக்கோலஸ் மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ் (Cilia Flores), வெறும் அதிபரின் மனைவி மட்டுமல்ல, வெனிசுலா அரசியலில் மதுரோவிற்கு இணையாக அதிகாரம் கொண்ட ஒரு மிக முக்கியமான ஆளுமை. வெனிசுலாவில் இவர் முதல் பெண்மணி என்று அழைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, புரட்சிகரமான போக்கைக் குறிக்கும் வகையில் “முதல் போராளி” என்றே அழைக்கப்படுகிறார். மதுரோவின் ஒவ்வொரு முக்கிய முடிவுக்குப் பின்னாலும் இவரது ஆலோசனை இருப்பதாகக் கருதப்படுகிறது.
சிலியா புளோரஸ் ஒரு திறமையான வழக்கறிஞர். 1992-ல் ஹியூகோ சாவேஸ் ராணுவப் புரட்சி செய்து தோல்வியுற்று சிறையில் இருந்தபோது, அவருக்கு வாதாடி விடுதலையைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் குழுவில் சிலியா முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். அப்போதுதான் இவருக்கும் மதுரோவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் முக்கியத் தலைவராகவும் உள்ளார்.
சிலியா புளோரஸ், மதுரோவின் அரசியல் வாழ்க்கையின் ‘மூளை’யாகச் செயல்பட்டவர். மதுரோவின் மீதான ஒவ்வொரு தாக்குதலும் சிலியாவை பாதிக்கும், அதேபோல் சிலியாவின் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டும் மதுரோவின் ஆட்சியைப் பாதிக்கும் வகையில் அவர்களது பிணைப்பு உள்ளது.

