Last Updated:
Minister Arunraj | தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள அடுத்தக்கட்ட சவால்கள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.
சிஎன்பிசி மற்றும் நெட்வொர்க் 18 சார்பில் பெங்களூருவில் நடக்கும் ரைசிங் பாரத் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு பேசிய கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்.
நியூஸ் 18 சார்பாக அருண்ராஜிடம் நிர்வாக ஆசிரியர் விவேக் நாராயணன் கேள்வி எழுப்பினார். மருத்துவத்துறை, சிவில் சர்வீஸ், அரசியல் என தொடர் மாற்றங்களை பார்த்திருக்கிறீர்கள், உங்களின் இந்த மாற்றம் எப்படி இருக்கிறது? 3 வேலைகளிலும் எது மிகவும் கடினமானதாக நீங்கள் உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நான் மருத்துவராக இருந்த போது ஏழை மக்களின் தேவைகளை உணர்ந்தேன். சிவில் சர்வீஸில் இருந்த போது நிர்வாக திறமைகளை கற்றுக்கொண்டேன். இதன் வெளிபாடு தான் தற்போது அமைச்சராக என்னால் தொடர முடிகிறது. இதன் மூன்றிலும் அரசியலையே கடினமானதாக பார்க்கிறேன். ஏனென்றால் ஒரு வெளிச்சத்திற்கு கீழே இதில் இயங்குவது போல் இருக்கிறது. சின்ன தப்பு செய்தாலும் அது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதுவே கடினமானதாக பார்க்கிறேன் என தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் ஏற்கனவே தமிழ்நாடு சிறந்து விளங்கும் நேரத்தில் உங்களுக்கான புதிய சவால்கள் என்னவாக இருக்கும் இந்த துறையில் என்று விவேக் நாராயணன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நீங்கள் சொன்னது படி ஏற்கனவே தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. அதே போல, தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும்’ என்பதே தவெக அரசின் இலக்கு என்று பதிலளித்தார்.
அதே போல, புற்றுநோய் என்பது மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு விட்டால் ஒரு சாமானிய மக்கள் நிறைய பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்கின்றனர். தற்போது முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கிறது. இருந்தாலும் புற்றுநோய் சிகிச்சைக்கான தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதையும் தவெக அரசு இலக்காக வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெரிதாக பார்க்கப்படாத மருத்துவ தேவையாக மனநலம் சார்ந்த பிரச்சனையும், மாற்றுத்திறனாளிகள் குறைபாடு பிரச்சனையும் உள்ளது. தவெக அரசு இந்த தேவைகளை கண்டறிந்து சிறப்பாக செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வு குறித்த நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், தேர்தல்களுக்கு முன்பிருந்தே தமிழகம் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பொதுவான நுழைவுத் தேர்வை நடத்துவது கடினம் என்றும் வலியுறுத்தினார். அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியை மையப்படுத்தப்பட்ட சேர்க்கை செயல்முறையின் மூலம் நிர்வகிப்பதற்குப் பதிலாக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இதுவே தீர்வாக இருக்கும் எனவும் கூறினார்.
மேலும், “இந்தியா ஒரு கூட்டாட்சி மற்றும் பரந்த நாடு. தேர்தலுக்கு முன்பே கூட, சுகாதாரக் கல்வி, மருத்துவக் கல்வி ஆகியவற்றை மாநில அளவில் கொண்டு வர வேண்டும் என்ற நிலையான நிலைப்பாட்டை எங்கள் கட்சி எடுத்திருந்தது,” என்று அருண்ராஜ் கூறினார். நாடு தழுவிய தேர்வை நடத்துவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதத்தைக் கேள்வி எழுப்பிய அமைச்சர், “நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரே பொதுத் தேர்வை நடத்துவது மிகவும் கடினம். இந்தத் தேர்வுகளை நடத்துவதில் ஏன் இந்தப் பிடிவாதம்?” என்றார்.
தொடர்ந்து போதைக்கலாச்சாரத்தை ஒழிக்க தவெக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக பெரிய பெரிய குற்றங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இது ஒரு காரணியாக உள்ளது. சட்ட ஒழுங்கு சரியில்லாததால் போதை புழக்கம் கடந்த 5 – 10 ஆண்டுகளில் தான் அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்கு நாம் பள்ளிகளில் இருந்தே அறிவை விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சிறு வயதிலேயே இது போன்ற கருத்துக்களை பதியவைத்துவிட்டால் குற்றங்களை நிச்சயம் தடுத்துவிடலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
News18 Rising Bharat Summit | “கடைக்கோடி மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சையே தவெகவின் இலக்கு” – அமைச்சர் அருண்ராஜ்


