Last Updated:
நேபாளத்தின் முதல் பெண் இடைக்கால பிரதமரான சுஷிலா கார்கி, இந்தியா குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பதவி ஏற்றார். இதன் மூலம், இவர்தான் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.
ஏற்கனவே அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண் என்ற வரலாற்றைக் கொண்டிருந்த சுஷிலா கார்கி தற்போது, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெறுகிறார்.
முன்னதாக இவர் பெயர் பரிந்துரையில் இருந்தபோது அவர் சி.என்.என். நியூஸ்18-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் 1975ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றது, இந்தியத் தலைவர்களால் தான் ஈர்க்கப்பட்டது உள்ளிட்டவற்றைக் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அவர் அளித்த பேட்டியில், “Gen-Z குழு அரசாங்கத்தை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டின் நலன் கருதி அந்தப் பணியை ஆற்ற நான் தயாராக இருக்கிறேன்.
நான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றேன். இந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பலரும் என் நினைவில் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் பழமையான இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது. இந்தியா, நேபாளத்திற்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்தியர்கள் எப்போதும் நேபாளத்தின் நலம் விரும்புவார்கள்.
இந்தியத் தலைவர்களைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்திய நண்பர்கள் என்னைச் சகோதரியைப் போல்தான் நடத்தினார்கள். பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்கி முதலில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி. அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலைப் பொறுத்துக்கொள்ளாததற்காக நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.
இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. தற்போது நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், நேபாள வரலாற்றில் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்கி என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
September 12, 2025 10:03 PM IST
News18 Exclusive | நேபாள இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்கி இந்தியாவைப் பற்றி சொன்னது என்ன தெரியுமா?


