[ad_1]
Last Updated:
நேபாள இடைக்கால தலைவராக Gen-Z குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி சி.என்.என். நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
இதனையடுத்து அமைதி திரும்பியுள்ள நேபாளத்தில், இன்று 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணொளி வாயிலாக கூடி நாட்டின் இடைக்கால தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு எடுத்துள்ளனர். அதில் பெரும்பாலோரின் தேர்வாக அந்நாடு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இருந்துள்ளார்.
விரைவில் இவர் நேபாளத்தின் இடைக்கால தலைவராக செயல்படுவார் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் சி.என்.என். நியூஸ்18-க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் 1975ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றது, இந்தியத் தலைவர்களால் தான் ஈர்க்கப்பட்டது உள்ளிட்டவற்றை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி சி.என்.என். நியூஸ் 18க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “Gen-Z குழு அரசாங்கத்தை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டின் நலன் கருதி அந்தப் பணியையாற்ற நான் தயாராக இருக்கிறேன்.
நான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றேன். இந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பலரும் என் நினைவில் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் பழமையான இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது. இந்தியா, நேபாளத்திற்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்தியர்கள் எப்போதும் நேபாளத்தின் நலம் விரும்புவார்கள்.
நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்கி முதலில் ஆசிரியராக தனது பணியை துவங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு நேபாளம் உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி. அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலைப் பொறுத்துக்கொள்ளாததற்காக நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.
இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக செய்திகள் உள்ளன.
September 10, 2025 7:53 PM IST
News18 Exclusive | இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகத்தில் படித்தவர் நேபாளத்தின் இடைக்கால தலைவர்? யார் இந்த மேனாள் நீதிபதி சுஷிலா கார்கி?