Last Updated:
NEET முதுநிலை மருத்துவ தேர்வில் 800-க்கு 9 மதிப்பெண் எடுத்தவர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரியில் MD PHARMACOLOGY சீட் பெற்றது அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 800க்கு 9 மதிப்பெண் எடுத்த மருத்துவருக்கு சீட் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2025-2026 கல்வியாண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு கட் ஆஃப் 800 மதிப்பெணக்ளுக்கு 103 ஆக என குறைக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி-களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்ணை மைனஸ் 40ஆக குறைத்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்தது. 9,000 காலி இடங்களை நிரப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டதால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த திங்களன்று முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அரசு ஒதுக்கீட்டில் 800-க்கு 100 மதிப்பெண்களுக்கு கீழ் மதிப்பெண் எடுத்த 7 பேருக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டில் கட்ஆஃப் மேலும் குறைந்து வெறும் 9 மதிப்பெண் எடுத்தவருக்கு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரியில் MD PHARMACOLOGY பயில இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் நூற்றுக்கும் கீழ் மதிப்பெண்கள் எடுத்த 21 மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ கல்வியில் சேர இடம் கிடைத்துள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மருத்துவர்கள் சேரவில்லை என்றால் கட் ஆஃப் மேலும் குறையும் என்றும் கூறப்படுகிறது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட சங்கங்களும், மூத்த மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


