குடிநுழைவுத் துறையின் MyIMMs அமைப்பை ஹேக் செய்த ஒரு கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்ட 12 நபர்களில் ஆறு குடிநுழைவு அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரண்டு நிறுவன இயக்குநர்கள், மூன்று வெளிநாட்டினர், நான்கு குடிநுழைவு அதிகாரிகள், குடிநுழைவுத் துறையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் அடங்குவதாக MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்தார்.
30 மற்றும் 40 வயதுகளில் உள்ள அந்த சந்தேக நபர்கள், நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் MACC தலைமையகம் மற்றும் பினாங்கு குடிநுழைவுத் துறையில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். 2011-ஆம் ஆண்டுக்கான பயன்படுத்தப்படாத தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதிச் சீட்டு (PLKS) ஒதுக்கீடுகளை, அதற்கான வரியைச் செலுத்தாமல் இந்தக் கும்பல் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 1,306 மோசடியான PLKS அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டதால், அரசாங்கத்திற்கு RM2.4 மில்லியன் என மதிப்பிடப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியதாக பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.விசாரணைகளுக்கு உதவுவதற்காக, பினாங்கு, புத்ராஜெயாவில் உள்ள பல நிறுவன வளாகங்கள் மற்றும் குடிநுழைவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சோதனை நடத்தியதாக ஹலிம் கூறினார். சந்தேக நபர்கள், காவலில் வைப்பதற்கான மனுக்கள் தொடர்பாக இன்று புத்ராஜெயா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.



