இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளாட்டினம் விழாவை கொண்டாடியது. அதாவது, அந்த நிறுவனத்தின் தற்போதைய வயது 77. இந்த நிறுவனம் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதாவது, தோனி கேப்டனாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், தனது நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவராக தோனியை நியமித்தார். இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்திய சிமெண்ட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்.
தற்போது இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் பிடி. சந்தையில் கோலோச்சி வரும் அல்ட்ராடெக் நிறுவனத்திடம் போகப் போகிறது. ஆம், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவதற்கு அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் குமார் மங்கலம் பிர்லா முன்வந்துள்ளார். இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், சிமெண்ட் வியாபாரத்தில் அதானி கடும் போட்டியை சந்திக்க நேரிடும்.
இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் ஒரு பங்கின் விலை ரூ.390 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 32.7 சதவீத பங்குகளை ரூ.3,954 கோடிக்கு அல்ட்ராடெக் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதற்கு முன்பு அல்ட்ராடெக் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா சிமெண்டின் பெரிய முதலீட்டாளர் ராதாகிருஷ்ணன் தமானியின் 23 சதவீத பங்குகளை வாங்கியது. இதன்மூலம் அல்ட்ராடெக் நிறுவனம், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை மொத்தம் ரூ,7,100 கோடிக்கு வாங்கியுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சீனிவாசன் குடும்பத்திடம் இருக்கின்றன.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் அல்ட்ராடெக் நிறுவனத்தின் எல்லை மேலும் விரிவடையும். அதாவது, தென்மாநிலங்களில் காலூன்ற முடியாமல் தவித்து வரும் அல்ட்ராடெக் நிறுவனம், இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மேலும் வளர்ச்சியடையும்.
அல்ட்ராடெக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்பு, அதானி குழுமம் பன்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு இறுதி ஒப்பந்தம் செய்தது. இதனால், சிமெண்ட் சந்தையில் அதானி குழுமத்திற்கும், பிர்லா குழுமத்திற்கும் இடையிலான போட்டி மேலும் அதிகரிக்கப் போகிறது. திறன் அடிப்படையில் பார்த்தால், அல்ட்ராடெக் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாகும். அது ஆண்டுக்கு 153 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது. இதை 2027ஆம் ஆண்டில் 200 மில்லியனாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
முட்டைக்குள் இருந்தே பேசும் ஒரே உயிரினம் எது தெரியுமா? 99% பேருக்கு தெரியாது!
அதானி குழுமத்தின் அம்புஜா ஏசிசி சிமெண்ட் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது ஆண்டுக்கு 89 மில்ல்லியன் டன் உற்பத்தி செய்கிறது. இதற்கு அடுத்து 50 மில்லியன் டன் உற்பத்தியுடன் ஸ்ரீ சிமெண்ட் மூன்றாவது இடத்திலும், டால்மியா பாரத் 47 மில்லியன் டன் உற்பத்தியுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. ஜேகே சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 22 மில்லியன் டன்களுடன் இருக்கிறது.
.