Last Updated:
விண்வெளி ஆராய்ச்சி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன.
இந்தியா மற்றும் தென்கொரியா இடையிலான வர்த்தகம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் லீ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லி வந்தடைந்த தென்கொரிய அதிபருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டிற்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அதிபர் லீ மரியாதை செலுத்தினார். இந்தப் பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு உச்சிமாநாடு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, வரவிருக்கும் காலங்களில் சிப் (Semiconductors) தயாரிப்பு முதல் கப்பல் கட்டுதல் வரை, தொழில்நுட்பம் முதல் எரிசக்தி வரை அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதற்காக ‘இந்தியா-கொரியா நிதி மன்றம்’ மற்றும் ‘தொழில்துறை கூட்டுறவுக் குழு’ போன்ற புதிய அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஓராண்டிற்குள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம் மட்டுமின்றி, கலாச்சார ரீதியாகவும் இரு நாடுகள் நெருங்கி வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் கொரிய இசை (K-pop), திரைப்படங்கள் மற்றும் அனிமேஷன் துறைகளுக்கு வளர்ந்து வரும் வரவேற்பை அவர் பாராட்டினார். இந்தியா மற்றும் தென்கொரியா இடையிலான வர்த்தக வளர்ச்சியை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, 2030-க்குள் இந்த வர்த்தகம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விண்வெளி ஆராய்ச்சி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன. தென்கொரிய அதிபர் லீ-யின் இந்த வருகையானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதியை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
Modi-Lee Summit: இந்தியா – தென்கொரியா இடையிலான வர்த்தகம் இரட்டிப்பாக அதிகரிக்கும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..


