கோலாலம்பூர்: தேசியப் பாடகி சித்தி நூர்ஹலிசா தருதின் இன்று மாஜு விரைவுச்சாலையில் (MEX) ஒரு விபத்தில் சிக்கினார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சித்தி தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். ஆனால் விபத்து குறித்த எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை. அவரது மேலாளர் ரோஸி அப்துல் ரசாக், சித்தியின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். எல்லாம் நலமாக உள்ளது. அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி என்று ரோஸி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறினார்.
அவரையும் சித்தியையும் ஏற்றிச் சென்ற வாகனம் உட்பட, இந்த விபத்தில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார். பல இணையவாசிகள், விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் என்று நம்பப்படும் புகைப்படங்கள் உட்பட, இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சிப்பாங் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு, பாடகி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த மோதல் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.




