Last Updated:
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 39 மருந்துகளின் சில்லறை விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கூட்டம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில், புதிய மருந்துகளுக்கான உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், 39 புதிய மருந்துகளுக்கான சில்லறை விலைகளை நிர்ணயித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ‘போயரிங்கர் இங்கல்ஹைம்’ நிறுவனத்தின் (Boehringer Ingelheim India) மரபணு மாற்றப்பட்ட ரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்தின் விலை ஒரு குப்பிக்கு 60,238 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்கா லேப்ஸ் நிறுவனம் சார்பில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதுசார்ந்த நோய்களுக்கான அம்லோடிபைன், டெல்மிசார்டன் மருந்துகளின் விலைக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரேபீஸ் தடுப்பு மருந்துக்கான விலையை 119 ரூபாயிலிருந்து 112 ரூபாயாக குறைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. கால்சியம் மற்றும் வைட்டமின் D3 மாத்திரை ஒன்றின் விலை ரூ.8.93 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சன் பர்மா, மேன்கைண்ட் பார்மா, கிளன்மார்க் போன்ற நிறுவனங்களின் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்களுக்கான மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விலை வரம்புகளின் மூலம், சந்தையில் ஏற்கனவே அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த சில குறிப்பிட்ட மருந்து பிராண்டுகளின் அதிகபட்ச சில்லறை விலை தோராயமாக 10% முதல் 45% வரை குறைய வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.


