இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் எனச் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.
வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, “நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான்.

சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை” என்று கூறினார்.
மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.