
Last Updated:
Manmohan Singh | மன்மோகன் சிங்ற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் (92) நேற்று (டிசம்பர் 26) இரவு டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரின் மறைவையொட்டி, மத்திய அரசு டிசம்பர் 27 அன்று நடைபெற இருந்த அனைத்து அரசுத் திட்டங்களையும் ரத்து செய்துள்ளது. மேலும், டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நாடு முழுவதும் ஏழு நாள் தேசிய இரங்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் தனது அனைத்து நிகழ்வுகளையும் ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.
இறுதி சடங்குகள் மற்றும் நேரம்:
டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்குகள் டிசம்பர் 28, சனிக்கிழமை, முழுமையான அரசு மரியாதையுடன் நடைபெறுமென காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மன்மோகன் சிங்கின் மூன்று மகள்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?.. முழு விவரம் இதோ!
மன்மோகன் சிங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு அவரது உடல் காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு காலை 8:30 முதல் 9:30 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர், அவரது உடல் சடங்குக்காக ஊர்வலமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும்.
சடங்கு தாமதமாகியதற்கான காரணம்:
டாக்டர் மன்மோகன் சிங் நேற்று இரவே மறைந்திருந்தாலும் அவர்களின் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதால், அவரின் வருகைக்காக சடங்குகள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சடங்கு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாகும்.
மறைவுப் பகுதி மற்றும் அரசு மரியாதை:
முன்னாள் பிரதமர்களின் இறுதிச்சடங்குகள் டெல்லியில் வரையறுக்கப்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். மன்மோகன் சிங் அவர்களின் உடல் இந்திய தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெறும். தேசியக் கொடி நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் எந்தவிதமான அரசு நிகழ்வுகளும் நடைபெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.
December 27, 2024 3:55 PM IST

