Last Updated:
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்தார். குக்கி-மெய்தி வன்முறையால் 250 பேர் பலி. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு. சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.
மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையடுத்து, முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே நீடித்து வரும் வன்முறை, கடந்த மே மாதம் உச்சத்தை தொட்டது. சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியான இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. முதலமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இன்று நடைபெற இருந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர், முதலமைச்சர் பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார். புதிய அரசு அமைக்கும் வரை பதவியில் நீடிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டதை அடுத்து, காபந்து முதலமைச்சராக பிரேன் சிங் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு, பாஜக கூட்டணி கட்சிகளின் அதிருப்தியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜக மேலிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
February 10, 2025 8:23 AM IST


