Last Updated:
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து ஒரு போர்க்கப்பல் இந்தியாவை குறி வைத்தால், அந்தப் போர்க்கப்பலை மும்பை கடற்கரையிலிருந்து அதிகபட்சம் 5 நிமிடங்களில் அழித்துவிட முடியும்
இந்திய விஞ்ஞானிகள் மணிக்கு 12 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இந்த சோதனை வல்லரசு நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
எளிதாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இந்த ஏவுகணையால் ஒரு மணி நேரத்தில் இந்த ஏவுகணை புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனை ஒரு மணி நேரத்தில் சென்றடைந்து விடும். அந்த அளவுக்கு இந்த ஏவுகணை வேகம் நிறைந்ததாகும்.
இதற்கு நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை LRAShM என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை வெற்றிகரமாக உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் சோதனை செய்தனர். அப்போது இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை சென்று தாக்கியது.
இந்திய கடற்பரப்பில் இருந்து 1500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு எதிரியின் கப்பல் அல்லது போர்க்கப்பலை இந்தியா உருவாக்கியுள்ள ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்துவிடும். அதாவது இந்திய கடற்பரப்பிலிருந்து ஏவப்பட்ட அடுத்த 8 நிமிடங்களில் எதிரியின் போர்க்கப்பல் அழிக்கப்பட்டு விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய அமைப்புகள் வேறு எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்று இருப்பது இந்திய கடற்படைக்கு பெரிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. இந்த வலிமையான ஏவுகணை மூலம் சீனாவையும் இந்தியாவால் எளிதாக எதிர்த்துப் போரிட முடியும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். உதாரணத்திற்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து ஒரு போர்க்கப்பல் இந்தியாவை குறி வைத்தால், அந்தப் போர்க்கப்பலை மும்பை கடற்கரையிலிருந்து அதிகபட்சம் 5 நிமிடங்களில் அழித்துவிட முடியும்.
LRAShM ஏவுகணை மூலமாக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான சவாலை கொடுக்க முடியும். இந்த இரு நாடுகளிடமும் 1000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மட்டுமே தாக்கக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 1500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
March 07, 2025 4:28 PM IST
LRAShM: மணிக்கு 12 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லும் ஏவுகணை.. வல்லரசு நாடுகள் வியக்கும் இந்திய தொழில்நுட்பம்


