பந்துவீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு அதன் தற்காலிக தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் பலம் சேர்க்க, அகில தனன்ஞயவும் தனது மாய சுழல் மூலம் பங்களிப்பினை வழங்கினார்.
2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் 03ஆவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்து, தொடரை ஆரம்பித்திருக்கின்றது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு இரண்டாவது போட்டியாகவும், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு முதல் போட்டியாகவும் அமைந்த தொடரின் மூன்றாவது மோதல் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (06) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் தலைவர் பானுக்க ராஜபக்ஷ, இந்த தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் போட்டியில் முதல் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்திருந்த தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஏமாற்றம் தந்திருந்தனர்.
பந்துவீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு அதன் தற்காலிக தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் பலம் சேர்க்க, அகில தனன்ஞயவும் தனது மாய சுழல் மூலம் பங்களிப்பினை வழங்கினார்.
இதனால் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க தொடங்கிய கோல் கிளேடியட்டர்ஸ் அணி, தமது முக்கிய துடுப்பாட்டவீரர்களான பானுக்க ராஜபக்ஷ, சமிட் பட்டேல் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை அவர்கள் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றினை எட்ட முடியாத நிலையில் பறிகொடுத்திருந்தது.
ஆனால் மத்திய வரிசையில் பென் டங், மற்றும் இசுரு உதான ஆகியோர் சிறு ஆறுதல் வழங்க கோல் கிளேடியட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை எடுத்தது.
கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக பென் டங் 25 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற, இசுரு உதான 2 சிக்ஸர்கள் அடங்கலாக 17 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் தனன்ஞய டி சில்வா, அகில தனன்ஞய மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 117 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, தொடக்கத்தில் தடுமாற்றத்தினை காட்டியிருந்தது.
அந்தவகையில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் முன்வரிசை வீரர்களாக காணப்பட்டிருந்த பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா மற்றும் டொம் பென்டன் ஆகியோர் 10 ஓட்டங்களை கூட தாண்டியிருக்காத நிலையில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அணியின் பதில் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்துடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களுடன் அடைந்தது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த தினேஷ் சந்திமால் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது இருக்க, தனன்ஞய டி சில்வா 24 ஓட்டங்களுடன் அணியின் வெற்றிக்கு சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்தார்.
கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி உருவாக்கிய நுவான் துஷார மற்றும் புலின தரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவரான தனன்ஞய டி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.