தேர்தல் விதிமீறல் : நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
தேர்தல் விதிமுறைகளை மீறி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூடங்குளம் அருகே உள்ள இருக்கன் துறை பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று தொடங்குகியது. இன்று காலை தொடங்கும் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சார பயணத்தில் திடீர் மாற்றம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து நடைபெறவுள்ள பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி, நாமக்கல்லில் காலை 11.40-க்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூஜூவாடி சோதனை சாவடியில் நகை வியாபாரியிடம் 30 1/2 பணம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ஹைதராபாத்திலிருந்து கோவை சென்ற சொகுசு பேருந்தை சோதனை மேற்கொண்டதில் நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் பைகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 30 லட்சம் 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் ஓசூர் சார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரியங்கா அவர்கள் மூலம் நகைகள் மற்றும் பணங்கள் தரம் பிரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தரையில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்த இயக்குனர் தங்கர்பச்சான்…..
கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடும் இயக்குனர் தங்கர்பச்சான் இன்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த போது அங்கு ஒரு கிளி ஜோசியர் அமர்ந்திருந்தார். அவரிடம் தரையில் அமர்ந்து கொண்டு தங்கர் பச்சான் தனக்கு கிளி ஜோசியம் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து போட்டு கடைசியாக ஒரு அட்டையை ஜோசியரிடம் கொடுத்தது அதனை எடுத்து பார்த்தபோது அதில் அந்த கோவிலில் உள்ள சுவாமியான அழகுமுத்து அய்யனாரே வந்த நிலையில் உங்களுக்கு வெற்றி தான் என ஜோசியர் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தங்கர் பச்சான் ஒரு வாழைப்பழத்தை வா ராஜா வா என கூப்பிட்டு கிளிக்கு உணவாக ஊட்டி விட்டு அங்கிருந்து சென்றார். அவர் புறப்படும் போது அங்கு வந்த திருநங்கைகள் அவருக்கு திருஷ்டி சுத்தி போட்டு வழி அனுப்பி வைத்தனர்.
#JUSTIN பரப்புரையின் போது கிளி ஜோசியம் பார்த்த இயக்குநர் தங்கர்பச்சான் #ThankarBachan #PMK #ElectionCampaign #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/xVBYhWSB9M
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 8, 2024
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் ராஜ்நாத் சிங், பின்னர் வாகன பேரணியிலும் பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து, நாகை தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும், தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான ஜான் பாண்டியனை ஆதரித்தும் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிக்க உள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில் சிக்கிய பணம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள காங்குப்பம் கிராமத்தில் அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், ஏறி குதித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் , கட்டுக்கட்டாக ஏழரை லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த கோரி திமுக புகார்
தமிழ்நாடு முழுவதும் நயினார் நாகேந்திரன் உட்பட அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
“சிக்கிய ரூ.4 கோடி எனது பணம் இல்லை” – நயினார் நாகேந்திரன் விளக்கம்
நெல்லை விரைவு ரயிலில் 4 கோடி ரூபாய் பணத்துடன் பாஜக பிரமுகர் பிடிபட்டுள்ள நிலையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் தான் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது
சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் தேர்தல் ஆணையத்திடம் சிக்கியது. இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், தாம்பரத்தில், நெல்லை விரைவு ரயிலுக்குள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில் பாலமணி தலைமையிலான குழு சோதனை மேற்கொண்டது.
நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், சென்னையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
- First Published :