Last Updated:
கொலை செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகவே போலீசார் சேத்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் பட்ட பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பந்த்வால் தாலுகா பிசி ரோடு (B.C. Road) பேருந்து நிலையத்தில் 21 வயது பெண் லாவண்யா பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஜூன் 16ஆம் தேதியான நேற்று லாவண்யா பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அவரது தூரத்து உறவினரான சேத்தன் என்பவர் அங்கு வந்திருந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேத்தன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாவண்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பகீர் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், பந்த்வால் போலீசார் சேத்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், லாவண்யாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் மகளை இழந்ததால் கண்ணீரில் மூழ்கியுள்ள பெற்றோர், சேத்தன் குறித்து பல அதிர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து லாவண்யாவின் தந்தை பாலகிருஷ்ண கௌடா நியூஸ்18 கன்னடாவுக்கு அளித்த பேட்டியில் சேத்தனை பற்றி எங்களுக்கு எந்த தகவல்களும் தெரியாது, அவன் எங்கள் தூரத்து உறவினர் மட்டுமே. சேத்தனை பற்றி எங்கள் மகளும் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் எங்கள் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய லாவண்யாவின் தாய், சேத்தனை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என்றும், எங்கள் மகள் நிரபராதி இதுவரை சேத்தனை பற்றி எங்களிடம் பேசியது கூட இல்லை என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார்.
அதே சமயம் லாவண்யாவும் சேத்தனும் காதலித்து வந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும், ஆனாலும் சேத்தன் தொடர்ந்து லாவண்யாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் போலீசார் லாவண்யா கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Lavanya Murder Case | பட்டப்பகலில் பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!


