Last Updated:
“சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். என் சிகிச்சைகளும் வரும்நாட்களில் குறைந்துவிடும்” – மூன்றாம் சார்லஸ்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு புற்றுநோய் உறுதியானது குறிப்பிடத்தக்கது. வீடியோ மூலம் தான் நலமாக இருப்பதை அறிவித்துள்ள அவர், ஆரம்பகால நோயறிதலின் அவசியம் என்ன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இதுதொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள மூன்றாம் சார்லஸ், புற்றுநோயை தொடக்கத்திலேயே அறிவது எந்த அளவிற்கு அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது என்பது பற்றி பேசியுள்ளார். பிரிட்டிஷ் ஊடகத்துக்கு இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பாட்காஸ்ட்டில், புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என தன் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை விதைத்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 2024-ல் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. பின் சிகிச்சை மூலம் இவர் மீண்டபோதும், என்ன வகை புற்றுநோய் இவருக்கு ஏற்பட்டதென அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தனது பேட்டியில் சார்லஸ், “புற்றுநோயை எதிர்த்த என்னுடைய இந்த பயணத்தில் புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். பல உயிர்களை அவர்கள் ஒவ்வொரு நாளும் காப்பாற்றுகின்றார்கள். புற்றுநோயை பொருத்தவரை ஆரம்ப கால நோயறிதல், உயிரைக் காப்பாற்றும் என்பதை மக்களுக்கு நான் என் சொந்த அனுபவத்தில் சொல்ல நினைக்கிறேன். தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாக பெற்றுள்ளேன். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வரும் புத்தாண்டிற்கு பின்னர் என் சிகிச்சைகளும் குறைந்துவிடும்” என்றுள்ளார். பிரிட்டன் அரசரின் இந்த காணொளி, மக்கள் மத்தியில் புற்றுநோயிலிருந்து மீள்வது தொடர்பான நம்பிக்கையை பெற்று வருகிறது.
December 13, 2025 1:59 PM IST


