உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி வைத்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாசசூசெட்ஸ் (Massachusetts) போக்குவரத்துத் துறையின் மேலாளராகப் பணிபுரியும் இவர், பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இவர் 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் செயலிழந்ததற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. அதன்பின் 2023-ல் மீண்டும் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார்.
தற்போது அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை வைக்கப் பரிந்துரைத்துள்ளனர். அவரது விருப்பத்தின்படி, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பன்றியின் சிறுநீரகத்தை வைத்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவ அறுவை சிகிச்சையில் இது ஒரு மைல்கல் எனப் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஸ்லேமேன் கூறுகையில், `இதை எனக்கு உதவுவதற்கான ஒரு வழியாக மட்டுமல்லமால், உயிர்வாழ மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை வழங்கும் ஒரு வழியாகவும் பார்த்தேன்’ என்றார்.
மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை 1954-ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.