Last Updated:
பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோவை வாளையார் சோதனை சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா, திருச்சூரில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. நோய் பாதித்த பறவைகளை எல்லையோர மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால், அந்தந்த மாநிலங்கள் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோவை வாளையார் சோதனைச் சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனர். ஓட்டுநர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்படுகிறது. வாகனம் எங்கிருந்து வருகிறது, எனக் கேட்டறிந்த பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை, இங்கே இணைக்கப்படும் காணொளி வழியாக அறிந்து கொள்ளலாம்…
தனியார் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து வருவோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


