Tamilnadu
oi-Vishnupriya R
ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை ஓரிரு நாட்களில் கொண்டாடப்படும் நிலையில், ராணிப்பேட்டையில் தலைமுறை தலைமுறையாக எல்லாவிதமான காவடிகளையும் தயார் செய்து வரும் தம்பதியிடம் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
தமிழக முழுவதும் ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு ஆங்காங்கே கூழ் வார்த்தல், ஆடித் திருவிழா, பொங்கல் வைத்தல் என விழாக் கோலம் பூண்டுள்ளது.

அந்த வகையில் ஆடி கிருத்திகை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை முதல் 7-ஆம் தேதி மாலை வரை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம் என கொண்டாட்டமாக உற்சவங்கள் நடைபெறும்.
அதேபோல் முருகன் கோவில்களில் கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணை எட்டும். முருகப்பெருமானுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்த காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.

அதன் அடிப்படையில் தேக்கு, வேங்கை, நாகமரம், அரசமரம், அத்தி, புங்க மரத்தில் செய்யப்பட்ட பூக்காவடி, உருட்டு காவடி, மடிப்பு காவடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம், சந்தைமேடு பகுதியில் வசிக்கும் சங்கர் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் தலைமுறை தலைமுறைகளாக காவடி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சங்கர் கூறுகையில் தைப்பூசம் மற்றும் ஆடி கிருத்திகைக்கு காவடி தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாட்களில் கூடை, ஏணி போன்ற தயாரிப்புகளில் ஈடுபடுகிறோம். அதுமட்டுமல்லாமல் இத்தொழிலை தலைமுறை தலைமுறைகளாக தலைமுறைகளைக் செய்து வருகிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் காவடிகளை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உட்பட சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கிறார்கள். தற்போது காவடி ரூபாய் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

காவடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். தேக்கு, வேங்கை, அரசமரம், புங்கமரம், அத்தி, நாகமரம் ஆகியவை தேவைப்படுகிறது. வளைவுகளுக்கு மூங்கில், மயில் இறகு, செயற்கை பூக்கள், வண்ணத் துணிகள், சிறுமணிகள், குஞ்சலங்களை கொண்டு அலங்காரம் செய்யலாம். பூக்காவடிகளில் பல்வேறு விதமான பூக்களால் அலங்கரிக்கலாம். மடிப்பு காவடிகளில் பக்தர்கள் எளிதாக தூக்கிச் செல்ல, மடித்து பூட்டிக் கொள்ளும் வகையில் அமைக்கப்படும்.
அது போல் பால் காவடி அல்லது தீர்த்தக் காவடியில் இரு புறங்கலில் பித்தளை அல்லது செம்பு சொம்புகலில் பால் அல்லது புனித நீர் கட்டி தொங்கவிடப்படும். இவ்வாறு அவரவர் பழக்கவழக்கத்திற்கேற்ப காவடிகளை வாங்கி அதற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து நடனமாடிக் கொண்டே முருகன் சன்னதியில் சேர்ப்பது வழக்கம்.



