Last Updated:
Kashmiri saffron: எல்லை மூடப்பட்ட வெறும் 4 நாட்களுக்குள், குங்குமப்பூவின் விலைகள் 10 சதவீதம் உயர்ந்தன.
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளையும் குங்குமப்பூவின் விலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வு காணப்படுகிறது. பல ஊடக அறிக்கைகளின்படி, உயர் ரக காஷ்மீர் குங்குமப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயர் ரக காஷ்மீர் குங்குமப்பூவின் விலை ஒரு கிலோ விலை இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை உயர்ந்துள்ளது.
சிவப்பு நிற மசாலாவாக பிரபலமாக உள்ள காஷ்மீரி குங்குமப்பூவின் தற்போதைய இந்த விலை உயர்வு, சுமார் 50 கிராம் தங்கத்தின் விலையை ஒத்ததாக இருக்கிறது. மேலும் வரலாறு காணாத இந்த விலை அதிகரிப்பு உலகளாவிய மசாலா வர்த்தகத்தில் காஷ்மீர் குங்குமப்பூவிற்கு நிலவி வரும் அதிகரித்த தேவை மற்றும் அதன் ஈடு இணையற்ற மதிப்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பதிலடி ராஜதந்திர நடவடிக்கையாக, அட்டாரி-வாகா எல்லையை மூட மத்திய அரசு முடிவெடுத்த சில நாட்களில் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. . பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் இன்னும் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. காஷ்மீரி குங்குமப்பூவின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதே என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் அட்டாரி-வாகா எல்லை மூடல், நாட்டின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கான முக்கிய சப்ளையராக இருந்த ஆப்கானிஸ்தான் குங்குமப்பூ இறக்குமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 55 டன் குங்குமப்பூவை இந்தியா பயன்படுத்துகிறது, ஆனால் காஷ்மீரின் உயரமான நிலங்களான புல்வாமா, பாம்பூர், புட்காம், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிஷ்த்வார் முழுவதும் குங்குமப்பூ விளைந்தாலும் கூட ஆண்டுக்கு 6 முதல் 7 டன் வரை மட்டுமே விளைகின்றன.
பற்றாக்குறை பொதுவாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி மூலம் ஈடுசெய்யப்படுகிறது, ஆப்கானிய குங்குமப்பூ அதன் துடிப்பான நிறம் மற்றும் வளமான நறுமணத்திற்காக விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஈரானிய வகை மலிவான மற்றும் பலராலும் வாங்க கூடிய அளவிற்கு இருக்கும் குங்குமப்பூ வகையாக உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் வழியாக நிலம் சார்ந்த வர்த்தக வழிகள் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குங்குமப்பூ விநியோக-தேவை சமநிலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லை மூடப்பட்ட வெறும் 4 நாட்களுக்குள், குங்குமப்பூவின் விலைகள் 10 சதவீதம் உயர்ந்தன. ஏற்கனவே உலகின் மிகவும் விலையுயர்ந்த விவசாயப் பொருட்களில் ஒன்றாக இருக்க கூடிய குங்குமப்பூ-வின் விலை வரலாறு காணாத விலை உயிரை சந்தித்துள்ளது.
காஷ்மீரி குங்குமப்பூ அதன் அடர் சிவப்பு நிறம், வலுவான நறுமணம் மற்றும் அதிக செறிவு கொண்ட குரோசின் ஆகியவற்றிற்காக உலகளவில் பிரபலமாக உள்ளது. அதே போல கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் வளர்க்கப்படும் உலகின் ஒரே குங்குமப்பூ வகையும் இதுவாகும். எனவே இதன் தனித்துவமான பண்புகளை அங்கீகரிக்கும் விதமாக, காஷ்மீர் குங்குமப்பூ கடந்த 2020-ஆம் ஆண்டில் புவியியல் குறியீடு (GI – Geographical Indication)-ஐ பெற்றது. ஒருபக்கம் விலை உயர்வு சிலருக்கு கவலை அளித்தாலும், மறுபக்கம் பல விவசாயிகளுக்கு, தற்போதைய விலை உயர்வு மகிழ்ச்சியைவழங்கியுள்ளது. ஏனென்றால் பல ஆண்டுகளாக விலைகள் வீழ்ச்சி, இடைத்தரகர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் சந்தை சுரண்டல் மற்றும் ஈரானிய குங்குமப்பூவின் கடுமையான போட்டி ஆகியவை பல காஸ்மீரை சேர்ந்த குங்குமப்பூ விவசாயிகளை விளிம்பு நிலைக்கு தள்ளியது, இதனால் அவர்கள் வேறு பயிர்களுக்கு மாறுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயமும் கூட ஏற்பட்டது.
ஆனால் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் பின்னணியில் குங்குமப்பூ விலைகள் உயர்ந்து வருவதால், காஷ்மீரின் குங்குமப்பூ பகுதி விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை சற்று அதிகரித்துள்ளது. உண்மையை சொன்னால் ஒரு காலத்தில் செலவுகளை ஈடுகட்ட போராடிய குங்குமப்பூ விவசாயிகள் தற்போது எதிர்பாராத லாபத்தை எதிர்பார்க்கிறார்கள். எனினும் கொள்கை நிச்சயமற்ற தன்மையால் இந்த லாபம் நீடிக்குமா அல்லது மீண்டும் பழைய நிலை ஏற்படுமா என்று கவலை இன்னும் அவர்களுக்கு இருக்கிறது.
காஷ்மீர் குங்குமப்பூ விலை கிடுகிடு உயர்வு… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? – பொதுமக்கள் அதிர்ச்சி!


