Last Updated:
சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டி, குலாலர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகல்விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கார்த்திகை தீபம் என்றது நம் மனதுக்கு வருவது விளக்கேற்றுவதாகும். பழமையான ஒளித் திருவிழா. உலக இருளை அகற்ற நினைத்த நம் முன்னோர்கள் ஒளியேற்றி வழிபட்டனர். இது சிவபெருமானை வழிபடுவதற்கும், இருளை நீக்கி ஞானத்தையும், நன்மையையும் கொண்டு வருவதற்கும், பார்வதி தேவி, முருகப்பெருமானின் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கும் உரியது.
இறைவன் ஜோதி பிழம்பாக தோன்றினான் என்பதை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்தித்தில் திருவண்ணாமலையில் மிகப்பெரிய தீபம் ஏற்றப்படுகிறது. வீடுகளிலும், ஆலயங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, செல்வத்தையும், நேர்மறை ஆற்றலையும் பெருகச் செய்து கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுபோல, சேலம் மாவட்டத்திலும் முத்துநாயக்கன்பட்டி, ஓமலூர், மற்றும் தாரமங்கலம் போன்ற கிராமப் பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கஞ்சநாயக்கன்பட்டி குலாலர் தெருவில் அதிகப்படியான மக்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்திகை தீபம் என்றவுடன் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊர் தான் பெரும்பான்மையான நியாபகம் வரும். மண்பாண்ட தொழில் இங்கு மிகப்பிரபலம். குறிப்பாக பொங்கல் சீசன் என்றால் மண்பானை அடுப்பு செய்வது விறுவிறுப்பாக நடைபெறும். அதுபோல தற்போது கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அகல் விளக்குகள் தயாரிப்பு குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது,”காலங்காலமாக மண்பாண்ட தொழில்கள் செய்து வருகிறோம். இங்கு மண்பானை, அகல் விளக்குகள், குடுவைகள், மண் அடுப்பு, கோயில் கலையங்கள் போன்ற மண்பாண்ட பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் பக்கமாக தயார் செய்வோம் தற்போது கார்த்திகை தீபத்தையொட்டி கூடுதலாக தயார் செய்து வருகிறோம். கடந்தாண்டு எதிர்பார்த்த வருமானம் எங்களால் ஈட்ட முடியவில்லை. பெருமளவில் மழை பெய்ததாலும் குறைந்த விலைக்கு வாங்கி சென்றதாலும் லாபம் பெரிதாக பார்க்க முடியவில்லை. எனவே நடப்பாண்டு ஓரளவுக்கு குறிப்பிட்ட லாபத்தை ஈட்ட எங்கள் பகுதி மக்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். அதற்கேற்றார் போல் தற்போது தீவிரமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மண்பாண்டத் தொழிலுக்கு முக்கிய மூலப் பொருளாக இருப்பது மண். மண்ணின் தரம் மிகவும் முக்கியம். பல்வேறு சுற்றுச்சூழல் காரணங்களினால், ஏரி, குளங்களில் உள்ள மண்ணின் தரம் குறைந்து வருகிறது. ஒட்டுமொத்த வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தொழிலை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சரியான திட்டத்தை அறிவிக்க வேண்டும். அடுத்து வரும் இளம் தலைமுறையினர் ஈடுபாடு காட்டுவதில்லை. நவீனத்துவத்தையும் அறிவியலையும் புகுத்த வேண்டும். தொழிலை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய அடிப்படை நோக்கம். தமிழக அரசு எங்களது வாழ்வாதாரத்தை காக்க சிறந்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
Salem,Salem,Tamil Nadu
November 18, 2025 5:11 PM IST

