Last Updated:
ஈரான் நாடு உலகின் முக்கிய நீர் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை தனது நட்பு நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அடைத்திருந்தது.
அமெரிக்காவின் போர்நிறுத்த வாக்குறுதிகளைத் தாங்கள் நம்பத் தயாராக இல்லை என்று ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. எப்போதும் ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்று ஈரான் ராணுவம் விடுத்துள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் காலங்களில் ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு சிறிய அத்துமீறலுக்கும், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மற்றும் வீரியமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பேசிக்கொண்டு, மறுபுறம் தனது நட்பு நாடுகளுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதையும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதையும் ஈரான் தனது அதிருப்திக்குக் காரணமாகக் கூறுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரான் நாட்டிற்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஈரான் நாடு உலகின் முக்கிய நீர் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை தனது நட்பு நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அடைத்திருந்தது.
இதனால் சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார சிக்கல்கள் மெல்ல மெல்ல உருவாக தொடங்கின. இந்த பின்னணியில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில் அமெரிக்கா – ஈரான் இடையே 2 வாரத்திற்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போர்நிறுத்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டாலும், அது ஒரு தற்காலிகமான தீர்வு மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.
“தங்கள் மீது மீண்டும் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால், முன்னெப்போதையும் விட வீரியமான பதிலடி கொடுக்கப்படும்” என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த சமாதான முயற்சியைத் தாங்கள் முழுமையாக நம்பவில்லை என்றும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
Iran vs US : அமெரிக்காவை நம்ப மாட்டோம்.. ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் பதற்றம் நீடிப்பு


