Last Updated:
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் பெட்ரோகெமிக்கல் ஆலை பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஈரான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், அந்நாடு மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. ஈரானின் மாக்சார் (Mahshahr) நகரில் உள்ள பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த ஆலையில் பணியாற்றிய 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் இடைவிடாமல் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. அவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவழியில் தாக்கி அழித்தன. குவைத்தில் உள்ள எண்ணெய் ஆலை மீதும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த ஆலை பலத்த சேதமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், ஈரான் ராணுவத்தின் பெரும்பாலான தலைவர்களை கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
Footage shows the aftermath of Israeli airstrikes on Iran’s Mahshahr petrochemical zone, with damage reported at the Fajr 1 and Fajr 2 facilities in Khuzestan. pic.twitter.com/leKwa6bxMd
— Afshin Ismaeli (@Afshin_Ismaeli) April 4, 2026
அதேநேரம், அமெரிக்காவின் அனைத்து விதமான எச்சரிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானத்தில் இருந்த ஒரு வீரர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


