ஒருபுறம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதையும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் முயற்சிகள் நடப்பதையும் டிரம்ப் உறுதிப்படுத்துகிறார். அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்மூஸ் நீரிணையை திறப்பது குறித்து சாதகமான சிக்னல்களையும் அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். மறுபுறம், ஈரான் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் கடுமையான ராணுவத் தாக்குதல்களை நடத்த தயங்க மாட்டோம் என்றும், ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன் என்றும் கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்கிறார். டிரம்பின் முரணான பேச்சுக்களுக்குப் பின்னால், உள்நாட்டு அரசியல் அழுத்தம், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
ஈரான் விதித்த அந்த 7 நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
1) லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முழுமையாக நிறுத்த வேண்டும்.
2) பல்வேறு வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரானின் கோடிக்கணக்கான நிதியை விடுவிக்க வேண்டும்.
3) ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும்.
4) ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்க வேண்டும்.
5) ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.
6) அமெரிக்கா ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தனது ராணுவப் படைகளை வாபஸ் பெற வேண்டும்.
7) போரால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களில் தலையிடக் கூடாது.
ஆகிய நிபந்தனைகளை ஈரான் விதித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் இந்த நிபந்தனைகளை அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்ட ஒன்றாம் நாள் முதல் 6-வது நாள் வரை, வளைகுடா பகுதியில் வான்வழி தாக்குதல்கள் மற்றும் கடற்படை மோதல்களை தவிர்க்க வேண்டும் என ஈரான் கேட்டுக் கொண்டிருந்தது. 7-வது நாளில், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 7-வது நாளுக்கு பின்னர், ஈரான் அணுசக்தி திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 7-வது நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஹார்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது. ஈரான் முன்வைத்த இந்த 7 நாள் போர்நிறுத்தத் திட்டத்தையும், நிபந்தனைகளையும் ஏற்க டிரம்ப் மறுத்துவிட்டார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் விரும்புவதாகவும், இதற்கு சாத்தியமே இல்லை என்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வாட்ஸ் (Mike Waltz) தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையின் மீதான பிடியை தளர்த்தும் வரை, ஈரான் மீதான பொருளாதார நெருக்கடி தொடரும் என்றும் மைக் வாட்ஸ் (Mike Waltz) கூறியிருக்கிறார். ஈரான் தனது பொருளாதார வாய்ப்புகளை முற்றிலும் இழந்துவிட்டதாலேயே, பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். “They are dying – the money isn’t coming in”. என ஈரானின் பொருளாதார நிலை குறித்து டிரம்ப் கிண்டலாக பேசியுள்ளார்.
