Last Updated:
ஆர்.சி.பி அணியில் இடம்பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்
ஐபிஎல் 2026 சீசனை ஒட்டி மினி ஏலம் அபுதாபியில் அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த மினி ஏலத்தில் ஐந்து வெளிநாட்டு வீரர்களுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர்களை வாங்க வேண்டிய கட்டாயம் சில அணிகளுக்கு இருப்பதால், அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டன.
டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்துள்ளார். வீரர்களை விடுவித்ததன் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 64 கோடி ரூபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுமார் 44 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. இந்த தொடரில் பல்வேறு அணிகளுக்கு வெளிநாட்டு வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் காரணமாக அவர்களுக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. சென்னை அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை வாங்குவதற்கு மற்ற அணிகளுடன் சென்னையும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.சி.பி அணியில் இடம்பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். மோசமான ஃபார்மில் இருந்தாலும் இவரை வாங்க அணிகள் போட்டியிட கூடும்.
இதேபோன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமான ஜோஷ் இங்கிலீஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை வாங்குவதற்கு அணிகள் கண்டிப்பாக போட்டியிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னை அணியில் இடம் பெற்று கடந்த 2 சீசன்களில் விளையாடிய ரச்சின் ரவிந்திரா பல போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும் அவரை சென்னை அணி விடுவித்துள்ளது. இவரை வாங்குவதற்கு மற்ற அணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
November 16, 2025 8:51 PM IST


