சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து அசாத்திய தொடக்கம் தந்தது. குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து, சதம் அடிக்கும் வாய்ப்பை 3 ரன்களில் இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜெய்ஸ்வால் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து களம் புகுந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் அதிரடியைத் தொடர்ந்து, 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ரியான் பராக் தன் பங்கிற்கு 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
துவக்க வீரர்களின் அசுரத்தனமான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி ஒருகட்டத்தில் 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து 270 ரன்களைத் தாண்டும் நிலையில் இருந்தது. ஆனால், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் பிரபுல் ஹிங்கே 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், முக்கிய விக்கெட்டுகளான சூர்யவன்ஷி, ஜூரெல் மற்றும் ரியான் பராக் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் ரன் வேகத்திற்கு தடை போட்டார்.
மிடில் ஆர்டரில் தசுன் ஷனகா (5), டோனோவன் பெரைரா (12), ஜோஃப்ரா ஆர்ச்சர் (4), நந்த்ரே பர்கர் (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், ராஜஸ்தான் அணியின் வேகம் சற்றே குறைந்தது.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 12 ரன்களுடனும், சுஷாந்த் மிஸ்ரா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் பிரபுல் ஹிங்கே 3 விக்கெட்டுகளும், ஷிவாங் குமார், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஈஷன் மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கேப்டன் பேட் கம்மின்ஸ் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். சாகிப் உசேனும் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்து மிரட்டிய ராஜஸ்தான் அணி, இறுதியில் 20 ஓவர்களில் 243 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேற ஹைதராபாத் அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த இமாலய இலக்கை நோக்கி அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
