Last Updated:
ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றைத் தவறவிட்ட நிலையில், இந்த 2026 சீசனிலும் அதே நிலை தொடர்கிறது
ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மங்கி வரும் சூழலில், அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, நடப்பு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சுமாரான பேட்டிங் மற்றும் கேப்டன்சி விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையில், அடுத்த 2027 சீசனுக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 21 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் ருதுராஜ் 29.18 சராசரியுடன், 120.68 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் 321 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடங்கும்.
இது குறித்து ‘கிரிக்பஸ்’ தள நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் திவாரி, தோனியின் இடத்தை ருதுராஜால் நிரப்ப முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் “ருதுராஜ் தனது சொந்த ஆட்டத்தை உருவாக்க வேண்டும். ஒரு கேப்டன் ரன்களைக் குவிக்கும் போதுதான் அவரிடம் நேர்மறையான அணுகுமுறை இருக்கும். ஆனால் ருதுராஜிடம் இந்த சீசனில் பேட்டிங்கில் அந்த வேகம் இல்லை” என்று திவாரி விமர்சித்துள்ளார்.
மேலும், சென்னை அணியில் இணைந்து விளையாடி வரும் சஞ்சு சாம்சன் அடுத்த சீசனில் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்று திவாரி கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 477 ரன்களை 166.20 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார்.
இதில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக அடித்த இரண்டு அதிரடி சதங்களும் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏற்கனவே வழிநடத்திய அனுபவம் சஞ்சுவுக்கு இருப்பதால், அவர் சென்னை அணியை வழிநடத்த சிறந்த நபராக இருப்பார் என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றைத் தவறவிட்ட நிலையில், இந்த 2026 சீசனிலும் அதே நிலை தொடர்வதால் சிஎஸ்கே நிர்வாகம் அடுத்த மெகா ஏலத்திற்கு முன்னதாக கேப்டன்சி குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


