Last Updated:
ஜடேஜா – பெரேரா 6 ஆவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணி கவுரவமான ஸ்கோரை எடுக்க உதவினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ்ஹெட் களம் இறங்கினர்.
அபிஷேக் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கிளாசன் – இஷான் கிஷன் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக இஷான் கிஷன் 44 பந்துகளில் 6 சிக்சருடன் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கிளாசன் 40 ரன்களும், நிதிஷ் ரெட்டி 28 ரன்களும், சலில் அரோரா 24 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்காளக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினர்.
பிரபுல் ஹின்ஜ் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் 1 ரன் எடுக்க, அடுத்த பந்தை எதிர்கொண்ட சூர்யவன்ஷி சலில் அரோவிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த துருவ் ஜுரெல், லுவான் ப்ரிடோரியஸ் தாங்கள் எதிர்கொண்ட 2 ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதனால் முதல் ஓவர் முடிவில் 1 ரன் எடுத்திருந்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 2 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து பிரபுல் ஹின்ஜ் வீசிய அவரது 2 ஆவது ஓவரில் ரியன் பராக் 4 ரன்கிளல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 3 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் எடுத்திருந்தது.
இருப்பினும் அடுத்து இணைந்த ஜடேஜா – பெரேரா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணி கவுரவமான ஸ்கோரை எடுக்க உதவினர்.
பெரேரா 69 ரன்களிலும், ஜடேஜா 45 ரன்களிலும் ஆட்டமிழக்க, துஷார் தேஷ்பாண்டே 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Apr 14, 2026 12:01 AM IST

