Last Updated:
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆம் இடத்திற்கு சென்றுள்ள சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (13 ரன்கள்), சஞ்சு சாம்சன் (20 ரன்கள்) மற்றும் உர்வில் படேல் (6 ரன்கள்) ஆகியோர் லக்னோவின் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 52 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன் பின் ஜோடி சேர்ந்த கார்த்திக் சர்மா மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஜோடி அணியை மீட்டெடுத்தது. பிரெவிஸ் 25 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடிய கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவர்களில் சிவம் துபே 16 பந்துகளில் 32* ரன்களும், பிரசாந்த் வீர் 13* ரன்களும் எடுக்க, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்தது. லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணிக்கு, ஆரம்ப விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி பவர்பிளேயிலேயே சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. முதல் 6 ஓவர்களிலேயே லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது.
சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், வெறும் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 36 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 17 பந்துகளில் 32* ரன்களும், முகுல் சவுத்ரி 13* ரன்களும் எடுக்க, லக்னோ அணி 16.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் முகேஷ் சவுத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. அடுத்து நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை சென்னை அணியால் தக்க வைக்க முடியும்.
May 15, 2026 11:32 PM IST


