Last Updated:
140 கிமீ வேகத்திற்கு மேல் பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொண்ட அவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளர் டெல்லி அணிக்கு மிகவும் அவசியம்.
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எப்போது விளையாடுவார் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேல் செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும், அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விரைவில் அணியுடன் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஸ்டார்க்கின் வருகை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்திடம் இருந்து இன்னும் தடையில்லா சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும், அவர் தற்போது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முனாஃப் படேல் பேசுகையில், “நாங்கள் இரண்டு போட்டிகளில் வென்றுவிட்டதால் ஸ்டார்க்கின் குறை தெரியவில்லை. ஆனால், அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்.
140 கிமீ வேகத்திற்கு மேல் பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொண்ட அவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளர் டெல்லி அணிக்கு மிகவும் அவசியம். அவரது வருகை குறித்து நான் தினமும் நிர்வாகத்திடம் கேட்டு வருகிறேன், கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரைவில் அப்டேட் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்களான லுங்கி என்கிடி, டி. நடராஜன் மற்றும் அகிப் நபி ஆகியோருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக முனாஃப் கூறினார்.


