Last Updated:
லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னை அணியுடன் பயணிக்காமல் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. சீசனுக்கு முந்தைய பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயம் காரணமாக அவர் கடந்த 12 போட்டிகளாக விளையாடவில்லை.
லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னை அணியுடன் பயணிக்காமல் சென்னையிலேயே தங்கிவிட்டார். அந்தப் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில், வருகிற திங்கட்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான போட்டியில் தோனி மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். தோனி கடந்த 2,3 போட்டிகளாகவே விளையாடத் தயாராக இருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுவதில் தோனி இன்னும் சிறந்த ஃபினிஷராக விளங்குவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தோனியின் காயம் மற்றும் அவரது ஓய்வு குறித்து சென்னை அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மீது விமர்சனம் வைப்பது தவறானது என்று அஸ்வின் நிர்வாகத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தோனி இல்லாத நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு வரும் வேளையில், டெத் ஓவர்களில் அதிரடி காட்ட திணறும் சிஎஸ்கே மிடில் ஆர்டருக்கு தோனியின் வருகை மிகப்பெரிய பலமாக அமையும். சென்னை அணி பிளே-ஆஃப் செல்ல மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், தோனியின் இந்த கம்பேக் செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி தோல்வியடைந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைந்து விடும்.
May 16, 2026 10:33 PM IST


