Last Updated:
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கான புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 28 ஆம் தேதி ஆரம்பம் ஆகிறது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காகத் தனது அதிகாரப்பூர்வ புதிய சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வடிவமைப்பு அணியின் அடையாள நிறங்களான சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இது அணியின் ஆற்றல், பெருமை மற்றும் அச்சமற்ற மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சீருடையின் மையப்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அடையாளமான ‘சிங்கம்’ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. சிங்கத்தின் முத்திரையிலிருந்து தொடங்கி, துணி முழுவதும் வைர வடிவ வேலைப்பாடுகளாக இது மாறுகிறது. இதில் உள்ள சிங்கம் என்பது வீரர்களின் இயல்பான வேகம், ஆக்ரோஷம் மற்றும் திறமையைக் குறிக்கிறது.
அதே சமயம், வைர வடிவங்கள் அந்தத் திறமையானது கடினமான பயிற்சி மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு எப்படி ஒரு ஜொலிக்கும் வைரமாக மாறுகிறது என்பதைக் குறிப்பதாக பஞ்சாப் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
மேலும் இளம் வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையை அளித்து, அவர்களைப் பெரிய மேடைகளில் வெற்றி வீரர்களாக மாற்றுவதே தங்களின் தத்துவம் என பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சீருடையுடன், ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் அணி களம் இறங்குகிறது.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்- ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பண்ணு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், ஷஷாந்த் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய், மார்கோ யான்சன், கூப்பர் கோனோலி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய்குமார், யஷ் தாக்கூர், சேவியர் பார்ட்லெட், பிரவீன் துபே, விஷால் நிஷாத், லொக்கி பெர்குசன்.


