Last Updated:
கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒற்றை பேட்ஸ்மேனாக போராடிய முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 54 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
கேப்டன் அஜின்கியா ரஹானே அதிரடியாகத் தொடங்கி 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 45 ரன்களும், ரோவ்மன் பவல் 39 ரன்களும் சேர்த்தனர். இருவரின் சிறப்பான பங்களிப்பால் கௌரவமான ஸ்கோரை எட்டியது.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். லக்னோ அணிக்கு ஆரம்பம் சற்று சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தடுமாறியது. ஆயுஷ் பதோனி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு, வெற்றி கொல்கத்தா பக்கம் சாய்வது போல் தோன்றியது.
ஆனால் 7ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய முகுல் சவுத்ரி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 27 பந்துகளை எதிர்கொண்ட முகுல் சவுத்ரி 7 சிக்சர்களுடன் 54 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டபோது அதில் 2 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பற வைத்தார் முகுல் சவுத்ரி.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 2 ஆவது வெற்றியை பதிவு செய்து, தரவரிசை பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Apr 09, 2026 11:55 PM IST

