Last Updated:
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், இந்த இலக்கை எட்டுவது குஜராத் அணிக்குப் சவாலான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்குத் தொடக்கம் சற்று அதிர்ச்சிகரமாக அமைந்தது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், உர்வில் படேல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். இருப்பினும், ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று ஆடினார்.
அவர் 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ஷிவம் துபே 22 ரன்களும், இறுதியில் அதிரடியாக ஆடிய ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில் 18 ரன்களும் (3 சிக்ஸர்கள்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை காகிசோ ரபாடா சிறப்பாகச் செயல்பட்டு 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், இந்த இலக்கை எட்டுவது குஜராத் அணிக்குப் சவாலான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம் அந்த அணிக்கு ஓரளவிற்குப் கௌரவமான ஸ்கோரை ஈட்டித் தந்துள்ளது.


