Last Updated:
ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கூப்பர் கோனோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்து ஓரளவு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்து வந்தவர்களில் கிளென் பிலிப்ஸ் 25 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களும் எடுத்தனர்.பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் விஜய் குமார் வைஷாக் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி குஜராத் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தொடக்கம் சற்றே தடுமாற்றமாக அமைந்தது. தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பிரப்சிம்ரன் சிங் மற்றும் கூப்பர் கோனோலி ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது.
குறிப்பாக கூப்பர் கோனோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பிரப்சிம்ரன் சிங் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இடையில் ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, ஷஷாங்க் சிங் 4 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ரன் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இறுதியில் சேவியர் பார்ட்லெட் 11 ரன்கள் சேர்க்க 19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
குஜராத் அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கூப்பர் கோனோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Mar 31, 2026 11:39 PM IST

