Last Updated:
சொந்த மண்ணில் பெற்ற இந்த வெற்றி குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 2 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 15 ரன்களும், கூப்பர் கோனோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஒருகட்ட நிலையில் பஞ்சாப் அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 ரன்கள் (3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) குவித்து அணியை மீட்டெடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய தமிழக வீரர்களின் பங்களிப்பு வெற்றியை உறுதி செய்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சாய் சுதர்சன் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி 41 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
ஜோஸ் பட்லர் 26 ரன்களும், நிஷாந்த் சிந்து 15 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி 23 பந்துகளில் 40 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சொந்த மண்ணில் பெற்ற இந்த வெற்றி குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
May 03, 2026 11:54 PM IST

