Last Updated:
இதன் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் 8 ஆவது இடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். இளம் வீரர் ஆயுஷ் மத்ரே மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் பவுண்டரியை பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
17 பந்துகளில் 38 ரன்கள் விளாசி மாத்ரே அணியின் ரன் விகிதத்தை மளமளவென உயர்த்தினார். அவருக்கு பின் வந்த வீரர்கள் ஸ்கோரை உயர்த்த தவறினர். சர்ப்ராஸ் 23 ரன்களும், சிவம் துபே 13 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். இருப்பினும் சென்னை அணியின் துல்லியமான பந்து வீச்சால் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடக்க வீரர் பின் ஆலன் 1 ரன்னும், சுனில் நரைன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் அஜிங்யா ரகானே 28 ரன்களும், அங்ரிஷ் ரகுவன்ஷி 27 ரன்களும் எடுத்து ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர்.
கடைசி ஓவர்களில் ரோமன் பவெல் 31 ரன்னும், ரமன்தீப் சிங் 35 ரன்களும் சேர்த்தாலும், அவை அணி வெற்றி பெற உதவவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தொடரில் சென்னை பெறும் 2 ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் 8 ஆவது இடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
Apr 14, 2026 11:48 PM IST

