Last Updated:
Abhishek Sharma | சொந்த மண்ணில் விளையாடியும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா பிசிசிஐயால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 6ஆவது லீக் போட்டியாக கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 48 ரன்களும் எடுத்து அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
பவர்பிளே ஓவர்களில் மட்டும் அந்த அணி 84 ரன்களைக் குவித்தது. பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டி தனது பங்கிற்கு 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் பிளெசிங் முசரபானி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் ஃபின் ஆலன் 28 ரன்களில் வெளியேறினார். அங்கிரிஷ் ரகுவன்ஷி 52 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
இருப்பினும், மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் அஜிங்க்யா ரஹானே 8 ரன்களிலும், கேமரூன் கிரீன் 2 ரன்களிலும் வெளியேறினர். மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்து ஓரளவிற்குப் போராடினார். ஆனால், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொல்கத்தா அணி 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு சுருண்டது. ஹைதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளையும், ஈஷன் மலிங்கா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த மண்ணில் விளையாடியும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதற்கிடையே, இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது. அபிஷேக் சர்மா விதிமுறை 2.3-ஐ மீறியதாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது அபிஷேக் சர்மா அவுட் குறித்து சந்தேகம் எழுந்தது. வருண் சக்கரவர்த்தி பிடித்த கேட்ச் சந்தேகம் எழுந்தாலும் மூன்றாவது அம்பயர் அவுட் கொடுக்க விரக்தியுடன் வெளியேறினார் அபிஷேக்.
அப்போது கோபத்தில் அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் ஐபிஎல் விதிகளை மீறியதாக கருதப்பட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது பிசிசிஐ. தகாத வார்த்தைகள் அல்லது ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவதைக் குறிக்கும் பிரிவு 2.3-ஐ மீறியதாக அபிஷேக் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாகவும், மேலும் அவருக்கு ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் வழங்கியிருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Apr 03, 2026 11:51 AM IST


