Last Updated:
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி – பிலிப் சால்ட் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 65 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். ஹெட் 10 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இணைந்த இஷான் கிஷன் – கிளாசன் இணை ரன்களை குவித்தது. கிளாசன் 13 பந்துகளில் அதிரடியாக 24 ரன்கள் எடுத்தார். அனிகேத் வர்மா 26 ரன்களும், நிதிஷ் ரெட்டி 4 ரன்களும், அபினவ் மனோகர் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 48 பந்துகளில் 5 சிக்சர் 7 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி – பிலிப் சால்ட் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
25 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 11 ரன்களும், ரஜத்பட்டிதார் 18ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 32 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரொமாரியோ ஷெப்பர்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். காயத்தால் அவதிப்பட்ட டிம் டேவிட் 5 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களுரு அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
May 23, 2025 11:39 PM IST


