Last Updated:
கடந்த சில ஆட்டங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக் 1 ரன்னும், சுனில் நரைன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் அஜிங்யா ரஹானே ஓரளவு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தார்.
27 பந்துகள் எதிர்கொண்ட அவர் 4 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இளம் வீரர் ரகுவரன்சி 32 பந்துகளில் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.
கடந்த சில ஆட்டங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்தார். ரின்கு சிங் 32 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 200 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 4 ரன்னும், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தலா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிதீஷ் குமார் ரெட்டி 19 ரன்னில் வெளியேறினார். கமிந்து மென்டிஸ் 27 ரன்களும், ஹெய்ன்ரிக் கிளாசன் 33 ரன்களும் எடுத்து ஐதராபாத் அணி 100 ரன்கள் கடக்க உதவினர்.
16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஐதராபாத் அணியின் நெட் ரன் ரேட்டும் -1.612 என மிக மோசமான நிலையில் இருப்பதால் அடுத்து வரும் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணியால் செல்ல முடியும்
April 03, 2025 11:22 PM IST