இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக டெல்லி அணியில் ஃப்ரேசர் மெக்கர்க் – அபிஷேக் போரெல் களம் இறங்கினர். 9 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்கர்க் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த அபிஷேக் போரெல் – கே.எல்.ராகுல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. 37 பந்துகளை எதிர்கொண்ட போரெல் 1 சிக்சர் 5 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்றைக்கு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுலால் 32 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அக்சர் படேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்களை அதிரடியாக சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 188 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் தரப்பில் ஜோஃர் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
அந்த அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கேப்டன் சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 76 ரன்கள் சேர்த்தார்கள். சாம்சன் 31 ரன்னில் ஆட்டமிழக்க, ரியான் பராக் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சமனில் முடிந்த ஆட்டம்
17.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் துருவ் ஜுரெல் – ஹெட்மேயர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது மிட்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஒவரில் 1,1,2,2,1,1 என மொத்தம் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்
இதில் டெல்லி தரப்பில் ஸ்டார்க் வீச, ஹெட்மேயர், ரியான் பராக் எதிர்கொண்டனர். இந்த ஓவரில் 0, 4, 1, 4(NB), Run out, 1+Run out என 2 விக்கெட்டையும் இழந்து 11 ரன்கள் ராஜஸ்தான் எடுத்தது. இதையடுத்து 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் களம் இறங்கினர்.
இதையும் படிங்க – Zaheer Khan | அப்பாவான ஜாகீர் கான்..! மனைவி குழந்தையுடன் வெளியிட்ட க்யூட் போட்டோ
ராஜஸ்தான் தரப்பில் சூப்பர் ஓவரை சந்தீப் சர்மா வீச கே.எல்.ராகுல் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ராகுல் 2, 4, 1 என 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் எதிர்கொண்டபோது 4 ஆவது பந்தை சிக்சருக்கு அனுப்பி (மொத்தம் 13 ரன்கள்) அணியை வெற்றி பெற வைத்தார்.
April 17, 2025 12:02 AM IST

