ஐபிஎல் கிரிக்கட் தொடரில் இன்று 47 ஆவது லீக் ஆட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்ஷன் – சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தது. 30 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்த சாய் சுதர்ஷன் கில்லுடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
கில் 50 பந்துகளில் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் அதிரடியாக 26 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவரை மிஞ்சும் வகையில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி குஜராத அணியை சின்னாபின்னமாக்கினார்.
சிராஜ் வீசிய முதல் ஓவரின் 3 ஆவது பந்திலேயே சிக்சர் பறந்தது. குறிப்பாக இஷாந்த் சர்மா வீசிய 4 ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் உள்பட 28 ரன்கள் எடுக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் வீசிய 5 ஆவது ஓவரில் 2 சிக்சர் அடித்த சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.
இதேபோன்று கரிம் ஜனாத் வீசிய 10 ஆவது ஓவரில் 3 சிக்சர் 3 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்தார் சூர்யவன்ஷி. ரஷித் கான் வீசிய 11 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தை அவர் சிக்சருக்கு விளாசி 35 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட 2 ஆவது சதம் இதுவாகும். இதேபோன்று குறைந்த வயது வீரர் ஒருவர் எடுத்த சதமாகவும் இது மாறியது. 38 பந்துகளில் வைபவ் 101 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா வேகத்தில் போல்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க – IPL 2025 | 3 மணிநேரத்தில் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்திய விராட் கோலி..!
அவரை தொடர்ந்து நிதிஷ் ராணா 4 ரன்னில் ஆட்டமிழக்க யஷஸ்வி ஜெய்வால் 40 பந்துகளில் 70 ரன்னும், ரியான் பராக் 15 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்த நிலையில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14 வயதில் சதம் அடித்த ஒரே வீரர், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை ஏற்படுத்தினார் வைபவ் சூர்யவன்ஷி.
April 28, 2025 11:31 PM IST