Last Updated:
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மனதளவில் சென்னை வீரர்களுக்கு உத்வேகம் ஏற்படும்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 10-ஆவது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு மீதம் 7 போட்டிகள் உள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. நடப்பு தொடரில் குஜராத், டெல்லி, பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் பெங்களூரு, கொல்கத்தாவும், ஏழாவது இடத்தில் மும்பையும், எட்டாவது இடத்தில் ராஜஸ்தான் அணியும் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒன்பதாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்தையும் தற்போது பிடித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பாதி நிலையை கடந்து விட்டது. ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். தற்போதைய நிலவரப்படி சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
சென்னை அணியின் நெட் ரன் ரேட் -1.276 ஆக உள்ளது. நடப்பு சீசனில் ஒவ்வொரு அணியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. சென்னை போன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், சென்னை அணி தான் விளையாடும் மீதமுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மிக எளிதாக பிளே ஆப் சுற்றி உறுதி செய்ய முடியும். அல்லது மீதமுள்ள ஏழு போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைந்து விடும்.
மேலும் சென்னை அணியின் நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால், சிஎஸ்கே குறைந்தது 6 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சூழலில் இன்று சென்னை அணி வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மனதளவில் சென்னை வீரர்களுக்கு உத்வேகம் ஏற்படும். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் நெருக்கடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க – “யார்ரா இந்த பையன்…?” – ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆன வைபவ் சூர்யவன்ஷி!
இவற்றை தவிர்த்து லீக் சுற்றில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் சென்னை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம் அல்லது வெளியேறலாம்.
April 20, 2025 5:15 PM IST


