Last Updated:
நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 13 வது லீக் போட்டியாக பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஆட்டம் லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இதில் மார்ஷ் ஹர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே மார்க்கோ ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து இணைந்த நிக்கோலஸ் பூரன் – எய்டன் மார்க்ரம் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
மார்க்ரம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பூரன் 44 ரன்களும், ஆயுஷ் பதோணி 41 ரன்களும், அப்துல் சமாத் 27 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீரர்களாக அந்த அணியின் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் விக்கெட் கீப்பர் ப்ரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
8 ரன்களில் ஆர்யா ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் – ப்ரப்சிம்ரன் சிங் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 34 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து ப்ரப் சிம்ரன் சிங் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது.
April 01, 2025 11:18 PM IST


