Last Updated:
குல்தீப் யாதவ் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினை கிளம்பியுள்ளது. பிசிசிஐ தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் குல்தீப் யாதவ் சக வீரர் ரிங்கு சிங்கை ஐபிஎல் போட்டியின்போது கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில், டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 48வது போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தது. கொல்கத்தா வீரர்கள் குர்பாஸ், சுனீல் நரேன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இளம் வீரர்கள் ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங்கு 36 ரன்களும் சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய டெல்லி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. டூ பிளசி அதிகபட்சமாக 62 ரன்களும், கேப்டன் அக்ஷர் படேல் 38 ரன்களும் சேர்த்தனர். 18வது ஓவரை வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்களை வீழ்த்தி, டெல்லியின் வெற்றியை தடுத்து நிறுத்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியடைந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது, அதேநேரத்தில் கொல்கத்தா அணி 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, இந்தப் போட்டி முடிந்த பிறகு இரண்டு அணி வீரர்களும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தனர். ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் சக வீரர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென குல்தீப் யாதவ் அருகில் இருந்து ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு முறை அல்ல.. இரண்டு முறை பேசிக்கொண்டிருக்கும்போதே ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குல்தீப் யாதவ் விளையாட்டாக கன்னத்தில் அறைந்தது போல் இருந்தாலும் அதனை சற்றும் எதிர்பார்க்காத ரிங்கு சிங் சில நொடிகளில் கோபமடையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஐபிஎல் நிர்வாகிகளில் ஒருவரான ராஜிவ் சுக்லா அருகில் இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆடியோ எதுவும் கிடைக்காததால் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், சமூக ஊடகங்களில் குல்தீப்பின் செயலுக்கு கடும் எதிர்வினை கிளம்பியுள்ளது. பிசிசிஐ குல்தீப் யாதவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 30, 2025 9:34 AM IST


