Last Updated:
பாக். ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் எல்லையோர கிராம பகுதிகளில் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையிலான போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை எடுத்து தொடக்க வீரர்களாக பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்தெடுத்த இருவரும் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். இளம் வீரர் ஆர்யா, 6 சிக்சர் மற்றும் 5 பவுண்டரி உடன் 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்து தமிழக வீரர் நடராஜன் வேகத்தில் வெளியேறினார். இதை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்தார்.
அப்போது, மறுமுனையில் 28 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரை சதம் அடித்திருந்தார். அப்போது மைதானத்தில் திடீரென சில விளக்குகள் அணைக்கப்பட்டன. முதலில் இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விளக்குகள் அணைந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் எல்லையோர கிராம பகுதிகளில் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன அல்லது மின்தடை ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தரம்சாலாவில் மைதான விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் ஒவ்வொருவராக வெளியேற தொடங்கினர். அவர்களுக்காக மட்டும் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிய விடப்பட்டது. அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மைதானத்தை குறி வைத்து எதிரிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக மே 11 ஆம் தேதியன்று பஞ்சாப்- மும்பை அணிகள் மோதும் போட்டி தரம்சாலாவில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
May 08, 2025 10:10 PM IST


