Last Updated:
பும்ராவின் வேகம் மற்றும் வில் ஜாக்ஸின் சுழலில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது மும்பை அணி பெறும் தொடர்ச்சியான 5 ஆவது வெற்றியாகும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கெல்டன், ரோஹித் சர்மா களம் இறங்கினர். 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 2 சிக்சர்களுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த வில் ஜாக்ஸ் – ரிக்கெல்டன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது. 32 பந்துகளை எதிர்கொண்ட ரிக்கெல்டன் 4 சிக்சர் 6 பவுண்டரியுடன் 58 ரன்கள் எடுத்தார். ஜாக்ஸ்29 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் அதிரடியாக 54ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார்.
கடைசி ஓவர்களில் நமன் திர் 25ரன்களும், கோர்பின் போஸ்ச் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 215 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்க்ரம் 9 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வேகத்தில் நமன் திரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் (27 ரன்), ரிஷப் பந்த் (4 ரன்) ஆகியோரது விக்கெட்டுகளை வில் ஜாக்ஸ் தான் வீசிய 7 ஆவது ஓவரில் கைப்பற்றினார்.
ஆயுஷ் பதோனி 35 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போல்ட் 3 விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்து லக்னோ அணியை சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
April 27, 2025 7:29 PM IST


